"சமஷ்டி அடிப்படையிலான - தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற சுயாட்சிக்கான அரசியல் முறை பற்றி பேசுவதற்கு நாம் எமது சமாதான கதவுகளை திறந்தே வைத்துள்ளோம். அதற்கான பேச்சுகளுக்கும் தயார்."
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
'ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மழுங்கடிக்க செய்யப்பட்டு ஆயுதமுனையில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதாலேயே எமது இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தமிழர்கள் நீண்ட போராட்ட வரலாற்றை கொண்ட ஒரு இனம்.
எமக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
ஜனாதிபதியின் சிம்மாசன உரையில் நாடு தொடர்பில் பல விடயங்கள் கூறப்பட்டிருந்தாலும் இந்நாட்டில் 80 வருடங்களுக்கு மேலாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் அவர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்பது ஒரு துரதிஷ்டவசமான விடயமாகும்.
மிக முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை பற்றி ஜனாதிபதி கதைக்காமை எமக்கு ஏமாற்றமளிக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது தனது சிம்மாசன உரையிலும், இந்தியா சென்றிருந்தபோது நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதும் தமிழர் பிரச்சினை பற்றி பேசவில்லை. அவரின் இந்த தவிர்த்தல் நடவடிக்கை இந்நாட்டில் அவரை அடையாளம் தெரியாமல் ஆக்கிவைத்தது.
தேசிய மக்கள் சக்தியிடம் இன்று பெரும்பான்மை பலம் உள்ளது. விகிதாசார தேர்தல் முறைமையின்கீழ் அதிகூடிய ஆசனங்களை பெற்றக்கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை, ஆணையை மதிக்கின்றோம். சிங்கள சகோதரர்களின் உன்னதமான பங்கையும், இன்றைய மாற்றங்களையும் நாம் உள்வாங்க விரும்புகின்றோம்.
நாங்கள் இரத்தமும், சதையுமாக கண்ணீருடன் வாழ்ந்த இனம். சிங்கள சகோதரர்களால் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட யுத்தத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஓர் இனம். இந்த நிலையிலும்கூட உங்களோடு எங்களது கரங்களை சேர்த்து பயணிக்க விரும்புகின்றோம்.
உங்களது அந்த பலமான மாற்றங்களோடு தமிழ் மக்கள் தங்களுக்கான மாற்றங்களை நோக்கி நகரவும் தயாராக இருக்கின்றோம்.
நாங்கள் எதற்கும் எதிராளிகள் அல்லர். இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் பல பேச்சுகளை நடத்தியுள்ளோம். உன்னதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஒப்பந்தங்கள் கிழிக்கப்பட்டன. மேலும் சில ஒப்பந்தங்கள் கிடப்பில் போடப்பட்டன.
இன்று மாற்றம் வந்துள்ளது. எதையும் செய்யக்கூடிய வல்லமையுடன் தேசிய மக்கள் சக்தி வந்துள்ளது. தீர்வை நோக்கி பயணிப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எமது சமாதான கதவுகள் திறந்தே உள்ளன. சிங்கள மக்களுக்குரிய இன, மத, மொழி அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். அதேபோல எமக்குரிய உரிமைகள், அடையாளங்கள், பண்பாடுகள், நில உரிமை என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.
சமரசம் என்பது நீங்களும், நாங்களும் கைக்குலுக்கு கொள்வது அல்ல. இனத் தனித்துவங்களை மதித்து நடப்பதுதான் உங்களுக்கும், எங்களுக்குமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்தும்.
சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்கள், இணை பங்காளர்கள் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.
இனவாதத்துக்கு இடமளிக்கமாட்டோம் என ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம். உரிமை பறிக்கப்பட்டவர்களும், உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக வாழ முடியாது. எனவே, பல விட்டுக்கொடுப்புகள் அவசியமாக உள்ளது. அந்தவகையில் ஆட்சியாளர்கள் தீர்வு விடயத்தில் நெடு தூரம் பயணிக்க வேண்டும்.
இந்நாட்டில் அடக்குபவர்களும், அடிமைப்படுபவர்களும் இருக்கவே கூடாது.
சமஷ்டி அடிப்படையிலான தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற சுயாட்சிக்காக அரசியல் முறை பற்றி பேசுவதற்கு நாம் எமது சமாதான கதவுகளை திறந்தே வைத்துள்ளோம்." - என்றார்.