நவம்பர் 21 முதல் 27 வரையான மாவீரர் வார காலப்பகுதியில் வடக்கில் 244 நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன எனவும், இவற்றில் 10 நினைவேந்தல் நிகழ்வுகளிலேயே புலிகள் தொடர்பான இசை ஒலிபரப்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்கு எதிராக பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், விசாரணைகள் தொடர்கின்றன எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சுகளுக்கான அறிவித்தல்வேளையின்போது விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இனவாதத்துக்கு எதிரான மக்கள் ஆணையே தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அது இன ஐக்கியத்துக்கான ஆணையாகவும் அமைந்துள்ளது. இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு எதிரான அரசியல் இயக்கம் என்பதாலேயே தேசிய மக்கள் சக்திக்கு அனைத்து இனங்களை சேர்ந்த மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றது.
மாவீரர் தின நினைவேந்தல் பற்றி கடந்தவாரங்களில் பேசப்பட்டது. உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கு மக்களுக்குள்ள உரிமையை நாம் ஏற்கின்றோம் என அறிவித்திருந்தோம். இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளோம். வடக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் உரிமை உள்ளது என்பதை ஏற்கின்றோம்.
எனினும், புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால் அவ்வமைப்பின் சின்னம், இலட்சினை, கொடி, இசை என்பவற்றை பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கவில்லை.
நவம்பர் 21 மற்றும் 27 இற்கு இடைப்பட்ட மாவீரர் வார காலப்பகுதியில் வடக்கில் 244 நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிக்கையிட்டுள்ளனர்.
இவற்றில் 10 நிகழ்வுகளில் மாத்திரமே புலிகள் தொடர்பான இசை ஒலிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிஸார் சட்டத்தை செயற்படுத்தியுள்ளனர்.
இரு சம்பவங்கள் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்திலும், நான்கு சம்பவங்கள் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றத்திலும், ஒரு சம்பவம் தொடர்பில் யாழ்;. நீதிமன்றத்திலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. இதற்கமைய சுன்னாகம் பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெற்ற நினைவேந்தல்களை அடிப்படையாகக்கொண்டு தெற்கில் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்டு பல தகவல்கள் பரப்பட்டன. இதற்கு முன்னர் இடம்பெற்ற புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான படங்களை வெளியிட்டு அவை 2024 இல் நடந்தவை என காண்பிக்க முற்பட்டுள்ளனர். சில நிகழ்வுகள் வெளிநாட்டில் நடந்தவை. அவற்றை பரப்பியே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு முயற்சித்துள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் பரப்பட்ட காணொளிகள், படங்கள் வெளிநாடுகளில் இடம்பெற்றன. எனினும், அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகளை நினைவுகூர இடமளித்துள்ளார் எனக் காண்பிக்க முற்பட்டுள்ளனர். திட்டமிட்ட அடிப்படையிலான குழுவொன்றே இச்செயலில் ஈடுபட்டுள்ளது. அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள அந்த குழு தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்கில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிலிண்டர் அணியின் செயற்பாட்டாளர்கள். அரசியல் பின்புலம் கொண்ட நபர்களே இனவாதத்தை தூண்டும் வகையில் சமூகவலைத்தளங்களில் பிரசாரம் செய்துள்ளனர். அவர்களுக்கு எதிரான நடவடிக்கை சமூக ஊடக அடக்குமுறையோ அல்லது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையோ கிடையாது.
இந்நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இனவாதம் மூலம் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் முரண்பாடு ஏற்படவும் இடமளிக்கமாட்டோம். புதிய சட்டயங்களை இயற்றியேனும் அதற்கு ஒடுக்குவோம்."- என்றார்.