" போரில் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்ட இடங்களிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். அப்பகுதிகள் மயானமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கடந்த மாதம் நடைபெற்ற இறந்தவர்களை நினைவேந்துகின்றன செயற்பாட்டை தடுக்காமல், போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு இந்த அரசாங்கம் தடையேற்படுத்தாமல் இருந்தமை தொடர்பில் எனது மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இது ஒரு சிறந்த நல்லெண்ண முயற்சி.
அதேபோல யுத்தத்தில் இறந்த எங்களுடைய உறவுகள் புதைக்கப்பட்ட சில இடங்கள் இன்று இராணுவ முகாம்களாக உள்ளன. ஈச்சம்குளம் பகுதியில் துயிலும் இல்லமொன்று இருந்தது. அந்த துயிலும் இல்லத்தில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் புதைக்கப்பட்டார்கள். அந்த இடம் இன்று இராணுவ முகாம். அந்த இடத்துக்கு சென்று வருடத்துக்கு ஒருமுறையேனும் நினைவுகூரும் ஏற்பாடு வேண்டும். அந்த இடம் மயானமாக பிரகடனப்படுத்த வேண்டும்.
இராணுவ முகாம் தொடர்ந்து இருப்பது நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும். அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்."- என்றார்.