சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பன திட்டமிட்டுள்ளன. இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
சபாநாயகர் தனது கல்வித் தகைமைகள் தொடர்பில் போலியான தகவல்களை வழங்கி மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் எனக் கூறியே, அவருக்கு எதிரான அரசியல் சமரை, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த எதிரணிகள் ஆரம்பித்துள்ளன.
தனது பட்டப்படிப்பு மற்றும் கலாநிதி பட்டம் தொடர்பில் சபாநாயகர் உரிய தெளிவுபடுத்தலை வழங்க வேண்டும், அவ்வாறு இல்லையேல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி பதவி விலக வேண்டும். இவை இரண்டும் நடக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் எனவும் எதிரணிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் சபாநாயகர் விரைவில் தெளிவுபடுத்தலை வழங்குவார் என தேசிய மக்கள் சக்தி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சபாநாயகரின் அறிவிப்பு வெளிவரக்கூடும்.
ஆளுங்கட்சி வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம், எதிரணிகளால் மட்டும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்ய முடியாது.
நிலைமை அவ்வாறிருக்க 'பிரச்சார அரசியலுக்காக" சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக எதிரணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் பட்சத்தில் அது சபாநாயகர் ஒருவருக்கு எதிரான ஆறாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையாக அமையும். அத்துடன், சபாநாயகர் ஒருவருக்கு எதிராக குறுகிய காலப்பகுதிக்குள் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை பெற்று, ஏற்கனவே அது தொடர்பில் பதிவிட்டுள்ளேன். தற்போது மேலதிக சில தகவல்களையும் உள்ளடக்கி மீள பதிவு செய்யப்படுகின்றது.
🛑 1947 முதல் 2024 வரை சபாநாயகர்களுக்கு எதிராக ஐந்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதியாக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
ஆனால் அவை ஐந்தும் வாக்கெடுப்பின்போது தோல்வி அடைந்துள்ளன. இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தோல்வி அடைந்திருந்தாலும் அதன் பின்னர் இரு சபாநாயகர்கள் பதவி விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🛑 சுதந்திர இலங்கையில் சபாநாயகர் ஒருவருக்கு எதிராக முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1963 ஆம் ஆண்டிலேயே முன்வைக்கப்பட்டது. அப்போது இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியே நிலவியது. அக்கட்சியின் சார்பில் நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்து நாடாளுமன்ற தெரிவாகி இருந்த ஆர்.எஸ். பெல்பொல சபாநாயகராக பதவி வகித்தார்.
பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டன.
1963 நவம்பர் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 68 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எனினும், 1964 ஜனவரி 24 ஆம் திகதி அவர் பதவி விலகினார்.
🛑 இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1980 இல் முன்வைக்கப்பட்டது. அப்போது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி நிலவியது. ஆனந்த திஸ்ஸ த அஸ்விஸின் இராஜினாமாவையடுத்து சபாநாயகர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பேருவளை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
1980 டிசம்பர் 13 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 126 வாக்குகள் அளிக்கப்பட்டன. பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் 1983 செப்டம்பர் மாதம் அவர் பதவி விலகினார்.
🛑 மூன்றாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 1991 ஆம் ஆண்டு சபாநாயகர் எம். எச். மொஹமட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மொஹமட், அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குற்றப்பிரேரணையின்போது பக்கச்சார்பாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பிரேரணைமீது 1991 ஒக்டோபர் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 118 வாக்களும் அளிக்கப்பட்டன. இதன்படி பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
🛑 இந்நிலையில் சபாநாயகர் எம்.எச். மொஹமட்டிற்கு எதிராக 1992 இல் மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணைமீது 1992 ஜுன் 9 ஆம் தகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 68 வாக்குகளும், எதிராக 118 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்அடிப்படையில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
ஐந்தாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை 2024 ஆம் ஆண்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணையும் தோல்வியடைந்தது.
இந்நிலையிலேயே தற்போது புதிய சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் உள்ளன.
(நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இரகசிய வாக்கெடுப்பு மூலம் வென்றோ அல்லது ஏகமனதான ஆதரவுடனோ சபாநாயகர் பதவியை வகிக்கலாம். அப்பதவியை வகிப்பதற்கு கலாநிதி பட்டம் கட்டாயமில்லை. எனினும், தற்போதைய சபாநாயகர் தனது கல்வித் தகைமை தொடர்பில் போலித் தகவல் வழங்கிவிட்டார் என்பதே எதிரணிகளின் தர்க்கமாக உள்ளது. அதுவும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளதால்தான் அது பேசுபொருளாக மாறியுள்ளது.)
ஆர்.சனத்