முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய முப்படை பாதுகாப்பு அடுத்தவாரம் நீக்கப்படும் எனவும், பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நே;றறு அறிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்பவே பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
" முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல உரிய பாதுகாப்பு மீளாய்வின் பின்னரே பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பை நாம் குறைக்கவில்லை. அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை உரிய மீளாய்வுகளுக்கு பிறகு முறையாக கடடமைக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களால் நிராகரிக்கப்பட்ட வங்குரோத்து அரசியல்வாதிகள் இது தொடர்பில் தவறான கருத்துகளை சமூகமயப்படுத்திவருகின்றனர். இது மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்த நடவடிக்கை அல்ல. உரிய நிர்ணயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
மஹிந்த ராஜபக்சவுக்கு தற்போதுகூட 60 பொலிஸார், 228 முப்படையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிபதிகளுக்குரிய பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக கடந்துள்ள 11 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்து 448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயற்படுவோம். எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியபோவதில்லை.
அந்தவகையில் அடுத்தவாரம் முதல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினர் மீளப்பெறப்படுவார்கள். பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படும். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும்.
புதிய ஏற்பாடுகளுக்கமைய மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கென 60 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸ் வாகனமொன்றும், ஜனாதிபதி செயலக வாகனங்கள் மூன்றும் வழங்கப்படும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு 60 பொலிஸார் பாதுகாப்பு சேவையை வழங்குவார்கள். பொலிஸ் வாகனமொன்றும், ஜனாதிபதி செயலக வாகனங்கள் மூன்றும் அவருக்கு ஒதுக்கப்படும்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு 22 பொலிஸார் பாதுகாப்புக்கென ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸ் வாகனமொன்றும், ஜனாதிபதி செயலக வாகனங்கள் மூன்றும் வழங்கப்படும்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு 60 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொலிஸ் வாகனமொன்றும், ஜனாதிபதி செயலக வாகனங்கள் மூன்றும் வழங்கப்படும்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 60 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொலிஸ் வாகனமொன்றும், ஜனாதிபதி செயலக வாகனங்கள் மூன்றும் வழங்கப்படும்.
ஹேமா பிரேமதாசவுக்கு (முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மனைவி) 10 பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கப்படுவார்கள். ஒரு பொலிஸ் வாகனமும், இரு ஜனாதிபதி செயலக வாகனங்களும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு மட்டும் அல்ல முழு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும்."- என்றார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.