" போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நினைவிடம் தேவை. முள்ளிவாய்க்காலில் மே 18 நினைவுகூரல் நிகழ்வு இடம்பெறும் இடத்தில் அந்த நினைவாலயத்தை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
" 2024 நவம்பர் 27 ஆம் திகதியன்று எமது மக்கள், தங்களது உறவினர்களுக்கு மிகவும் அமைதியான முறையில் நினைவஞ்சலி செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதல் அடைந்தனர். இது விடயத்தில் ஜனாதிபதி முன்னெடுத்திருந்த நிலைப்பாட்டை பாராட்டுகின்றேன். நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறவில்லை. தமது உறவுகளை இழந்தவர்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். போரில் உயிரிழந்த தமது உறவுகளை மக்கள் நினைவுகூருவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை. இதுவே மக்களின் கோரிக்கையும்கூட.
எனவே, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாக கட்டப்படும் நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டால், அவர்களை நினைவுகூருவதற்கு அவர்களின் சந்ததியினருக்குகூட உதவியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டை பிரதிபலிப்பாகவும் அமையும். முள்ளிவாய்க்காலில் நினைவிடம் அமைக்கப்பட வேண்டும். இதற்குரிய அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும். இன பாகுபாடு காட்டாமல் இது விடயத்தில் உரிய முடிவை எடுக்க வேண்டும்." - என்றார்.