இலங்கைக்கு வருகைதரும் சர்வதேச ஆய்வு கப்பல்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தேசிய கொள்கைத் திட்டமொன்று வகுக்கப்படும். அதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, சர்வதேச ஆய்வுக் கப்பல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" சர்வதேச ஆய்வுக் கப்பல் விவகாரத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே செயற்படுகின்றோம். அந்தவகையில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயத்துக்கும் நாம் செல்லமாட்டோம்.
ஆய்வுக் கப்பல்கள் தொடர்பில் தேசிய கொள்கைத் திட்டமொன்று அவசியம். தேசிய கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆய்வு கப்பல்கள் மட்டுமல்ல இலங்கைக்கு வருகைதரும் அனைத்து கப்பல்களும் , எமது நாட்டு கடல் எல்லைக்குள் பிரவேசித்த பிறகு கடைபிடிக்க வேண்டிய அடிப்படை நிர்ணயங்கள் எவை என்பது தொடர்பில் ஆய்வுகளை நடத்தி அறிக்கையை முன்வைக்கும் பொறுப்பு இந்த குழுவுக்கு வழங்கப்படும். அதற்கமையவே எமது செயற்பாடுகள் அமையும்." - என்றார்.