" இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் உடன்படமாட்டோம். அதேபோல எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. பேச்சுகளை முன்னெடுக்கவே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளது. அதற்கமையவே செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம். எனினும், காலஓட்டத்துக்கேற்ப அதனை புதுப்பிக்க வேண்டிய தேவைப்பாடும் உள்ளது. அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
எட்கா உடன்படிக்கை தொடர்பில் கருத்தாடல் உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுவிட்டது எனவும், நடைமுறைக்கு வந்துவிட்டது எனவும் வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அது தொடர்பான பேச்சுகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக எட்காவை அமுல்படுத்தும் முடிவை எடுக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஆதரிப்பதில்லை என்பது எமது கொள்கை. இரு நாடுகளினதும் பொருளாதார நலனுக்காக செயற்பட நாம் தயார்." - என்றார்.