தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார்.
கண்டிக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி தேர்தல்கள் சம்பந்தமாக கூறியவை வருமாறு,
' உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்அடிப்படையில் உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அதன்பின்னர் புதிதாக வேட்புமனுக்கள் கோரப்படும். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட்டு அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்."- என்றார்.