சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை ஏ - 9 வீதியிலுள்ள ரெலிக்கொம் முன்பாக வைத்து கறுப்பு வாகனத்தில் கடத்த முற்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தம்மை கடத்த முற்பட்ட வேளை குறித்த ஊடகவியலாளர் தப்பிக்க முயற்சித்தபோது, கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நகரிலேயே இனந்தெரியாத இரு நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான தமிழ் ஊடகவியலாளர், சட்டவிரோத போதைப்பொருள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகங்களில் எழுதி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளது.