சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்று பத்தரமுல்லே சீலரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்காலத்தில் விளக்கமாறை கையில் எடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என குறிப்பிட்டு ஊடக சந்திப்புக்கு விளக்கமாறையும் தேரர் எடுத்து வந்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்கமாட்டோம் எனக் கூறிவந்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்பவே செயற்பட்டுவருகின்றது. அவ்வாறு செயற்பட வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் பொய்யுரைத்தே ஆட்சியை பிடித்துள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவுகளும் மீறப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுக்கமையவே ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவா இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது காட்டுச் சட்டம் பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.