இறுதிப்போரின்போது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.
அத்துடன், மஹிந்த ராஜபக்சமீது புலிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு,
“போர் இடம்பெறும் காலப்பகுதியில்கூட மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை. அவரை கொலை செய்வதற்கு பயங்கரவாதிகள் முற்படவில்லை. மஹிந்த தனித்து சென்றா போர் செய்தார்? இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் நாம் கட்டளை பிறப்பிக்கவில்லையா?
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எனக்கான பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டது. என்னை சிறையில் அடைத்தனர். அங்கு புலிகளும் இருந்தனர். அப்போது எமக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா?
மஹிந்த ராஜபக்சமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது பிரபாகரனுடன் பேச்சு நடத்துவது பற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த குறிப்பிட்டிருந்தார். போரை அனுமதிக்கவில்லை எனவும் கூறியிருந்தார். எனவே, மஹிந்தவுடன் புலிகளுக்கு எவ்வித வைராக்கியமும் இல்லை.
நாம் வேண்டாம் எனக் கூறியும், போர் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதாவது 2009 ஜனவரி 31, பெப்ரவரி 1 மஹிந்த போர் நிறுத்தத்தை வழங்கினார். இந்த போர் நிறுத்தத்தை வழங்காவிடின் மூன்று மாதங்களுக்கு முன்னரே போர் முடிந்திருக்கும்.
இந்த போர் நிறுத்தகாலப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலால் 5 கிலோமீற்றர்வரை பின்நோக்கி வரவேண்டிய நிலை எமது இராணுவத்துக்கு ஏற்பட்டது. பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பிச்செல்வதற்காகவே அந்த போர் நிறுத்தம் வழங்கப்பட்டிருந்தது. எனவே, மஹிந்தமீது புலிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
மிக் விமானத்தைவிடவும் ட்ரோன் விமானங்கள் விலை அதிகம். அவ்வளவு அதிகம் பணத்தை செலவளித்து மஹிந்தமீது யார் தாக்குதல் நடத்துவது?” -என்றார் பொன்சேகா.