இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டு வேலணையில் இறக்கிய விவசாயப் பொருள்கள் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேகொண்ட அதிரடி நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகம், இராமேஸ்வரம் ஊடாகக் கடத்தி வரப்பட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 39 மூடை விவசாயப் பொருள்களே இவ்வாறு நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
கடத்தி வரப்பட்ட மூடைகள் அனைத்தும் சென்னையில் இருந்து பொதி சேவை ஊடாக இராமநாதபுரத்துக்கு எடுத்து வந்தமைக்கான எழுத்துக்கள் மூடைகளில் காணப்படுகின்றன.
இந்தப் பொருள்களைக் கைப்பற்றிய படையினர் இவற்றை உடமையில் வைத்திருந்த மூன்று பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருள்கள் மற்றும் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தி வரப்பட்ட பொருள்கள் தற்போது இலங்கை நாணயத்தில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.