இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்குரிய பொறிமுறையை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சிறப்பானது. அதனை நாம் வரவேற்கின்றோம். தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றுவது மாத்திரம் அல்ல, பொருளாதாரம், சமூகம், மனித ஒழுக்கம், சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் நடவடிக்கைகள் தேவை. இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என நம்புகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்து இன்னும் 3 மாதங்கள்கூட ஆகவில்லை. நாட்டில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பலவீனப்படுத்தப்பட்ட ஜனநாயக வியூகத்தை சரிப்படுத்தல், பொருளாதார வீழ்ச்சிக்குரிய மோசடியான முடிவுகள் உள்ளிட்டவற்றை ஒரே தடவையில் சரிசெய்ய முடியாது என்பது எமக்கு தெரியும். ஆனால் இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைள் அவசியம்.
அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த ஆணையை பயன்படுத்தி , வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தைரியமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னணியிலுள்ள உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதனை செய்தது யார், அதன் நோக்கம் என்ன, எவரின் ஒத்துழைப்புடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பன பற்றி முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கைக்குள் கடந்தகாலங்களில் இப்படியான பல சம்பவங்கள் நடந்துள்ளன. படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை, இவற்றில் பல சம்பவங்கள் தொடர்பில் சரியாக விசாரணை இடம்பெறவில்லை. எனவே, இவை தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
அதேவேளை, புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியும் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பம் தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.