காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஒரு தெளிவான பதிலை வழங்கி, அவர்களின் உறவுகளுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
" நீண்டகாலமாக விசாரணை எதுவுமின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் சமூக வாழ்க்கையை வாழ நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
அத்துடன், காணாமல்போனோர் விடயத்திலும் ஒரு தெளிவான பதிலை கொடுத்து, நிம்மதியான வாழ்க்கை ஏற்படுத்த வேண்டும்.
எமது பகுதியில் போதைப்பொருள் பிரச்சினையும் உள்ளது. இரும்புக்கரம் கொண்டு அவற்றை ஒடுக்க வேண்டும்." எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு உதவி செய்ய புலம்பெயர் உறவுகள் காத்திருக்கின்றனர். எனவே, அவர்களுக்குரிய இரட்டைக்குடியுரிமை விசா வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்." - எனவும் ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.