மன்னார் நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வெளிநாட்டில் இருந்தே வழிநடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
' மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்;. மாட்டு வண்டி சவாரி தொடர்பில் 2018 இல் ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன." எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
' முதல் சந்தர்ப்பத்தில் இருவர் உயிரிழந்தனர். 2022 ஆம் ஆண்டில் நபரொருவர் வாகனத்தில் மோதி கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர் 2023 இல் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடைசியாக நேற்று இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முதல் இரு கொலைச் சம்பவங்களின் சந்தேக நபர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சம்பவத்தை வழிநடத்தியவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது." - எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.