புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய மஹிந்த ராஜபக்ச சிங்கம். அந்த சிங்கம் ஒருபோதும் திணறாது என்று ஜனாதிபதி அநுரவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே.
அத்துடன், டயஸ்போராக்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றவே மஹிந்தவை வெளியேற்றுவதற்குரிய சூழ்ச்சி நடக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க களுத்துறையில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையால் மொட்டு கட்சி உறுப்பினர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஊடக சந்திப்புகளை நடத்தி பதிலடிகளை கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவின் சார்பில் அவரது பேச்சாளரும் ஊடக சந்திப்பை நடத்தி இருந்தார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தமது கட்சி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக தான் ஜனாதிபதி என்பதையும் மறந்து அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் உரையாற்றியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைத்து அவரிருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முடிவு எவ்வித மீளாய்வும் இன்றி தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளது என்பது அவரின் உரைமூலம் உறுதியானது.
30 ஆயிரம் ரூபாவுக்கு எங்கு வீடு பெறமுடியும்? அந்த தொகையில் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு பொறுத்தமான வீட்டை பெறமுடியுமா? எனவே, இது சண்டித்தனமான அறிவிப்பாகும். மஹிந்த ராஜபக்சவை இவ்வாறு பழிவாங்குவதற்கு இனியும் இடமளிக்க வேண்டாம் என மஹிந்தவை நேசிக்கும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
30 வருடகால போரை முடித்த தலைவருக்கு எப்படி 30 ஆயிரம் ரூபாவுக்கு வீடு தேட முடியும்? மஹிந்த ராஜபக்சவிடம் சண்டித்தனம் காட்ட முன்னர் பாதாள குழுக்களிடம் அந்த சண்டித்தனத்தை காண்பியுங்கள்.
மஹிந்தவை வீட்டைவிட்டு வெளியேற்றுவதையா தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்? இது அரசியல் பழிவாங்கல் அல்ல. டயஸ்போராக்களின் சூழ்ச்சி. அந்த டயஸ்போராக்களின் ஒப்பந்தத்தையே அரசாங்கம் நிறைவேற்றுகின்றது.
மஹிந்த ராஜபக்சவை திணற வேண்டாமாம். போரை முடித்த சிங்கம் ஒருபோதும் திணறாது." - என்றார்.