" நான் புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். இல்லையேல் போட்டுத் தள்ளுங்கள்." - என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஆவேசம் பொங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கப்படாமை தொடர்பில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் கூறியவை வருமாறு,
" நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ளன. மக்கள் பிரதிநிதியான எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இது தொடர்பில் முறைப்பாடு முன்வைத்து, 36 நாட்களுக்கு பிறகே சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 64 நாட்கள் கதைப்பதற்கு இடமளிக்காமல் இருப்பது அரசாங்கத்தின் வெட்கம்கெட்ட செயலாகும்.
இந்த அரசாங்கத்துக்கு எனது மனதால் கொடுக்கும் சகல ஆதரவையும் இன்றிலிருந்து (நேற்று) விலக்கிக்கொள்கின்றேன். இனி உண்மையான எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்படுவேன்.
எனக்கு எதிராக 24 வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் வைத்தியராக இருந்தபோது ஒருவழக்குகூட போடப்படவில்லை. இவை தனிப்பட்ட ரீதியில் போடப்பட்ட வழக்குகள் அல்ல. ஊழல், மோசடிகளுக்கு எதிராக கதைக்கபோய் விழுந்தவையாகும்.
எனக்கு புலி முத்திரை குத்தப்படுகின்றது. புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் துப்பாக்கிச்சூடு நடந்துங்கள். நீங்கள் கொலை செய்துள்ளீர்கள். 80 காலப்பகுதியில் இவர்கள் (ஜே.வி.பி) கொலை செய்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்னையும் கொல்லுங்கள். எனக்கு இன்றுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. என்னை எவராவது கொன்றால் இந்த அரசாங்கம்தான் பொறுப்பு கூறவேண்டும்." - என்றார்.