பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, தற்போது அதற்கு பதிலாக மற்றுமொரு சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் c உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
" பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் பிரச்சினை உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மனுவில் தேசிய மக்கள் சக்தியினரும் அன்று கையொப்பமிட்டனர். தெற்கிலுள்ள மாவட்டங்களுக்கு அக்கட்சியின் பிரதிநிதிகள் என்னுடன் வந்திருந்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவருவார்களாம். புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி அன்று கூறப்படவில்லை.
அரசியல் கைதிகள் இல்லை என நீதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். இது ஏற்புடைய அறிவிப்பு அல்ல. இப்படியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் சிறிய குழுவாக இருந்தாலும் நாம் உரிய நடவடிக்கையில் இறங்குவோம்.
அத்துடன், மதுபான அனுமதி பத்திரம் வழங்குமாறு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளியிடப்படவேண்டும்." - என்றார்.