இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின்போது முப்படைகளின் ஆயுத வாகன தொடரணி இம்முறை இடம்பெறமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது எனவும், மூன்று விமானங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுநிலை) சம்பத் தூயகொந்தா தெரிவித்தார்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியவை வருமாறு,
'சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் இம்முறை ஆயிரத்து 873 இராணுவத்தினர் பங்கேற்பார்கள். இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட ஆயிரத்து 511 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. ( 40 சதவீதம் குறைப்பு) எனினும், அணிவகுப்புக்குரிய கம்பீரம், அபிமானம் என்பவற்றை போற்றி காக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
76 ஆவது சுதந்திர தின விழாவில் விமானப்படையின் 19 விமானங்கள் பங்குபற்றியுள்ளன. இம்முறை 3 விமானங்களே பயன்படுத்தப்படும். தேசியக் கொடியை கொண்டு செல்வதற்காக அவை பயன்படுத்தப்படும். முப்படைகளின் ஆயுத வாகன தொடரணி இடம்பெறமாட்டாது. நபர்களின் அணிவகுப்பு மட்டுமே இடம்பெறும்."- என்றார்.