மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கில் காணி பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்கும் செயல்பாடு துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும் , அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில்,சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு,போக்குவரத்து பிரச்சினைகள்,ஆளணி குறைபாடு,காணிவிடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டன.
பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.