நாம் அனைவரும் நாட்டிற்கான முழுமையான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சுதந்திரத்தை வென்றெடுக்கும் போராட்டகளத்தின் போராட்டக்காரர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும், இந்த தாய்நாட்டிற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனபோது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,
கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும் தருணத்திலேயே நாம் இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ காலனித்துவ யுகத்திலிருந்து விடுபட்டு 77 ஆண்டுகள் கடந்துவிட்ட ஒரு நாடு என்ற வகையில், சுதந்திரம் குறித்து புதிதாக சிந்திக்க முடியும்.உலகப் பொருளாதார அமைப்பில் நலிவடையாமல், அதன் ஒவ்வொரு அசைவிலும் நசுக்கப்படும் அடிபணிந்தவர்களாக அன்றி, பொருளாதாரத்துக்குள் நமது சுதந்திரத்தை அடைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்றுபட்டு இந்த தாய்நாட்டிற்காக அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. அந்த பொருளாதார
சுதந்திரத்திற்கான நமது போராட்டத்தில் நமது சமூக மற்றும் கலாசார சுதந்திரத்தை ஒருபோதும் நாம் இரண்டாம் பட்சமாக பார்க்க நாம் தயாரில்லை.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியியளர்கள் என்ற வகையில் வெறுப்பு மற்றும் கோபத்தால் மாசுபடுத்தப்பட்ட எமது தேசத்தின் உயிர்ப்பை தூய்மைப்படுத்தி குணப்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதில் மதத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்புள்ளது. மேலும், இந்த நாட்டின் வருங்கால சந்ததியினரை வளர்த்தெடுக்கும் அன்பான தாய்மார் அன்பான தந்தையர் என்ற வகையில் உங்களுக்கு சிறப்பான பணி உண்டு எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் என்ற வகையில், இந்த உலகத்தை உயர்ந்த மனித நேயம் மிக்க இடமாக மாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. அந்த உயர்ந்த மனித நேயத்தை அனைத்து மக்களும் சமமாக உள்வாங்குவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். சுதந்திரத்திற்கான போராட்டம் இந்த பரந்த நோக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, சுதந்திரத்தின் கனவை ஒன்றாகப் காண்போம். அந்தக் கனவை ஒன்றாக நனவாக்கிகொள்வோம் எனவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.