" தையிட்டி விகாரையை உடைப்பதன்மூலம் பிரச்சினை தீர்ந்துவிடுமா? எனவே, நாட்டில் இனவாதம், மதவாதம் என்பவற்றை மீண்டும் தூண்டாத வகையில் புத்தி கூர்மையுடன் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு எட்டப்படவேண்டும். அரசியல் இலாபத்துக்காக இவ்விடயத்தில் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை பிரச்சினை தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் முன்வைக்கும் தீர்வினை எட்டக்கூடிய வகையிலான அணுகுமுறை கையாளப்படும் - எனவும் அவர் கூறினார்.
யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், தையிட்டி விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
' தையிட்டியில் விகாரை கட்டப்பட்டு, வழிபாடும் இடம்பெற்றுவருகின்றது. இது பற்றி அன்று குரல் எழுப்பாதவர்கள், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காதவர்கள் இன்று இதனை பூதாகரமான பிரச்சினையாக தூக்கிப்பிடிப்பதற்கு முற்படுகின்றனர்.
இதனை உண்மையிலுமே இதய சுத்தியுடன் செய்கின்றனரா அல்லது உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான துருப்பு சீட்டாக பயன்படுத்த முயல்கின்றனரா?
எது எப்படி இருந்தாலும் இந்நாட்டில் இனவாதம் மற்றும் மதவாத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். அவற்றை மீண்டும் தலைதூக்க இடமளிக்கமுடியாது.
இந்த பிரச்சினைக்கும் கூடிய விரைவில் மக்களுடன் கலந்துரையாடி, மக்களோடு மக்களாக, மக்கள் முன்வைக்கப்படும் தீர்வினை எட்டக்கூடிய வகையில்யான அணுகுமுறையை கையாள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
விகாரை அமைக்கப்பட்டுள்ள இடம், மக்களுக்குரியது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே, மக்களுக்கு இழப்பீடு அல்லது அதற்கே உரிய காணிகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. மிக அதிகமான காணியை விகாரை உரிமையாளர்கள் தம்வசப்படுத்தியுள்ளனர்.
விகாரையை உடைப்பதன்மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். எனவே, இதற்கு சுமுகமான தீர்வை எட்டவேண்டுமே தவிர, இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் வகையிலான தீர்மானத்தை எடுக்கக்கூடாது." -என்றார்.