தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியான அழகரெத்தினம் வனகுலராசா என்பவரே முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்திலேயே இன்று காலை இப்போராட்டத்தை ஆரம்பித்தார்.
தனது கோரிக்கைகள் தொடர்பில் நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும், மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும், பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும், இலங்கையில் யாசகம் வீதம் அதிகரித்துள்ளதால், யாசகர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் போராளியான அழகரெத்தினம் வனகுலராசா கோரிக்கை முன்வைத்துள்ளார்.