' ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் ஆணையை புறக்கணித்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார் என்பதையே அவரது பாதீட்டு உரை வெளிப்படுத்துகின்றது." என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதீடு தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பாதீட்டு உரையையும், ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை தெரியவரும்.
நாடு அநுரவிற்கு என்று அதிகாரத்தை வழங்கினாலும், நாடு தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் என்றே கூறவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் வரம்புகளுக்குட்பட்டே பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதீட்டில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமோ, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் கடன் பொறிக்கோ தீர்வுகள் இல்லை. விவசாயம், கடற்றொழில் துறை, தோட்ட கைத்தொழில் துறையினர் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
புதிய கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் கூறியிருந்த போதும், அவர் நேரடியாகவே சர்வதேச நாணய நிதியத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி வருகின்றார்.
ஆட்சிக்கு வந்ததும் ஐஎம்எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறினாலும், அதற்கு மாற்றமாகவே ஜனாதிபதி இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆணையை புறக்கணித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார்.
அரச சேவையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு தடவையும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றனர், ஆனால் இறுதியில் 3 வருடங்களில் சொற்ப தொகையே சம்பளம் உயர்த்தப்படுகின்றது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு இது போதாது. தனியார் துறையினருக்கு மாற்றாந்தாய் கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது." - என்றார் எதிர்க்கட்சித் தலைவர்.