விவசாயிகள்மீது கை வைத்தால்தான் பிரபாகரனின் கதை முடிந்தது எனவும், கோட்டாபய ராஜபக்சவுக்குகூட ஆட்சியை கைவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
' விவசாயிகளால் ஆட்சியை தீர்மானிக்கவும் முடியும். கவிழ்க்கவும் முடியும் என்பதே உண்மை.
வேலுபிள்ளை பிரபாகரன் அன்று மாவிலாறுவை மூடினார். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்ன நடந்தது? இறுதியில் 2009 மே மாதம் பிரபாகரனின் கதை முடிந்தது. விவசாயிகள்மீது கை வைத்ததால்தான் அது நடந்தது." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இரசாயன உரத்துக்கு பதிலாக இயற்கை உரத்தை கொண்டுவருவதற்கு கோட்டாபய ராஜபக்ச முற்பட்டார். இறுதியில் ஐந்து வருடங்களுக்கு முன்னரே அவரும் வீடு செல்ல நேரிட்டது.
எனவே, விவசாயிகள் பற்றி சிந்தித்து செயல்படுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் தற்போதைய அரசாங்கத்துக்கும் அதே நிலைதான் ஏற்படக்கூடும்." - எனவும் ரோஹித அபேகுணவர்தன எச்சரிக்கை விடுத்தார்.
ரோஹித எம்.பியின் உரை முடிந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சுனா ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
' இவர் எமது தலைவர் பிரபாகரனை பற்றி கதைத்தார். 2009 இல் அவரின் கதை முடிக்கப்பட்டது எனவும் கூறினார்.
அப்படியானால் ஏன் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை...." என இராமநாதன் அர்ச்சுனா சிங்கள மொழியில் கூற முற்படுகையில் அவரின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.
இதன்போது எழுந்த அமைச்சர் வசந்த சமரசிங்க, ' இது ஒழுங்குப்பிரச்சினை அல்ல, தேவையற்ற பிரச்சினையை உருவாக்க முற்படுகின்றார்..." எனக் கூறினார்.
இதனையடுத்து எழுந்த ரோஹித அபேகுணவர்தன,
' பிரபாகரனை இவர்களின தலைவரரென நாள் விளிக்கவில்லை. ஹென்சாட்டை எடுத்து பாருங்கள். அன்றும் அவர் பயங்கரவாதி, இன்றும் அவர் பயங்கரவாதி, நாளையும் பயங்கரவாதிதான்." எனக் குறிப்பிட்டார்.