வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் மிக அத்தியாவசியமானவைதவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வடக்கு, கிழக்கிலுள்ள முகாம்கள் மற்றும் படையினர் பயன்படுத்தும் காணிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் (சிறிதரன்) கருத்து வெளியிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் நடைபெற்ற பாதுகாப்புசார் ஆலோசனைக்குழு கூட்டத்திலும் இவ்வியம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
எனவே, மிகவும் அத்தியாவசியமான காணியை மட்டும் வைத்துக்கொண்டு, ஏனையவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த பலாலி, அச்சுவேலி வீதி திறக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் (சிறிதரன்) கூறியதுபோல வடக்கு, கிழக்கில் 3 லட்சத்து 17 ஆயிரம் படையினர் இல்லை. முப்படைகளிலும் மொத்தமாக 2 லட்சத்துக்கும் குறைவான படையினரே தற்போதுள்ளனர்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முப்படையினர், பொலிஸாரை நாம் ஈடுபடுத்தியுள்ளோம்." - என்றார்.