போரின்போது இலங்கைப் படையினர் போர்க்குற்றம் இழைத்தனர் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உயிர்கொடுக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கையிலுள்ள இராணுவத்தை அரசுக்கு (நாட்டுக்கு) சார்பான தொழில்முறை இராணுவமாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதாவது அரசுக்கு சார்பு அற்ற, தொழில்முறையற்ற இராணுவமே தற்போது உள்ளது என்ற கருத்தையே இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
போரின்போது தொழில்முறை இராணுவத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் இராணுவம் போர்க்குற்றம் இழைந்தது என ஜெனிவா மனித உரிமை பேரவையாலும், டயஸ்போராக்களாலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த தவறான கருத்தை உண்மையாக்குவதற்கு மேற்படி தரப்புகள் முயற்சித்துவருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இராணுவம் அரசுக்கு சார்பற்றது, தொழில்முறையற்றது என்ற கருத்தை பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். தொழில்முறையற்ற இராணுவத்தால் போரை முடித்திருக்க முடியுமா?
தொழில்முறையல்ல இராணுவம் எனக் கூறப்படுவதன் அர்த்தம், போர்க்குற்றங்களில் ஈடுபடக்கூடிய இராணுவம் என்பதாகும்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் இந்த, பாதுகாப்பு படையினர்மீதூன தாக்குதலானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும், டயஸ்போராக்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
படை குறைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். அதற்குரிய நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. படையினருக்கு வழங்கப்படும் இறைச்சிகூட நிறுத்தப்பட்டுள்ளது. மரக்கறி உணவுதான் வழங்கப்படுகின்றது.
எமது பாதுகாப்பு படையினர் அரசுக்கு சார்பானவர்களே, அவ்வாறு இருந்ததால்தான் பயங்கரவாதிகள் ஒழித்தனர். அனர்த்தங்கள் ஏற்படும்போது சேவை செய்ய வருகின்றனர். எனவே, ஜனாதிபதியின் அறிவிப்பை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ” – என்றார்.