கிழக்கு மாகாணத்தை மையமாகக்கொண்டு இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அக்குழுவினரின் செயல்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு விழிப்பாகவே உள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது “கிழக்கில் கல்முனை பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாத குழுவொன்று தோற்றம் பெற்றுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி, ஆங்கில வார இதழொன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா, அக்குழவினர் ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர், அவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பினரா என அமைச்சரவை பேச்சாளரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ கிழக்கு மாகாணத்தை மையமாகக்கொண்ட அவ்வாறான குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பில் புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சுமீதான குழநிலை விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அக்குழவினரின் செயல்பாடு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விழிப்பாகவே உள்ளனர்.” – என்றார்.