இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கு அவர்கள் வழங்கும் பெரும் சேவையாகவும், பேருதவியாகவும் அமையும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டபோது அதனை தடுப்பதற்கு பாரிய பிரசாரங்களை ஆஸ்திரேலியா மேற்கொண்டது. சட்டமாக இருக்கட்டும், பிரச்சாரமாக இருக்கட்டும் உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
போர்காலத்தில் வடக்கு மக்கள் இந்தியா சென்றார்கள். இந்தியா அவர்களை பாதுகாத்தது. இதனை மதிக்கின்றோம். வடக்கில் தற்போது கடற்றொழில்தான் பிரதானமாக உள்ளது. எனவே, அதனை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்காமல்இருப்பதே வடக்கு மக்களுக்கு ஆற்றும் பெரும் சேவையென்பதை இந்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் கூறிக்கொள்கின்றேன்.
இந்தியாவில் உள்ள சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தலாம். இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுத்து, வடக்கு மீனவர்களின் கடற்றொழிலை பாதுகாப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கான பெரும் உதவியாக அமையும்.
இந்தியாவால் இதனை செய்ய முடியும். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கினாலும் வடக்கு மக்களுக்காக இதனை செய்ய வேண்டும். அப்போதே அந்த உதவிகளில் உண்மை தன்மை இருக்கும்." - என்றார்.