படை குறைப்பு யோசனை படு பயங்கரம்: அபாய சங்கு ஊதுகிறது ராவணா பலய அமைப்பு
"நாட்டில் எதிர்காலத்தில் போர் ஏற்படுமா, இல்லையா என்பதை தற்போதே கணிக்க முடியாது. எனவே, படை குறைப்பு செய்யும் தீர்மானம் படு பயங்கரமாகும்." - என்று ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன மகளிர் முன்னணியின் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு பெண்களே பெரும் பங்களிப்பு வழங்கினர். வீடு வீடாக சென்று அக்கட்சியின் பெண்கள் பொய்யுரைத்தனர். எனவே, அதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு எமது அணியிலுள்ள பெண்களுக்கு உள்ளது.மக்கள் மனம் அறிந்து சேவையாற்றுவதே சிறந்தது.
நுகேகொடையில் இருந்து கொழும்புவரை நபரொருவர் மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாக பயணித்துள்ளார். மூன்று இடங்களில் எரிபொருளும் நிரப்பியுள்ளார். கடுகண்ணாவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாதுகாப்பு நிலைவரம் இவ்வாறுதான் உள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முற்படுவது பாரதூரமான விடயமாகும்.
எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் போர் ஏற்படுமா, இல்லையா என்பதை தற்போது திர்மானிக்க முடியாது. கிழக்கில் அடிப்படைவாத குழுவொன்று இருப்பதாக புலனாய்வு பிரிவு கூறியுள்ளது. எனவே, எந்த நேரத்தில் தாக்குதல் நடக்கும் எனக் கூறமுடியாது. எனவே, இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு லட்சம்வரை குறைப்பதன்மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது." - என்றார்.