ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என வெளியாகும் தகவல்களை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
நல்லாட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றி உள்ள விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
'முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டார். அந்த உடன்படிக்கையை நாம் மதிக்க வேண்டும்.
காணாமல்போனவர்கள் உட்பட பல விடயங்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் ஆரம்பித்தோம்,அவை மிகவும் மெதுவாகத்தான் செயற்பட்டன. ஆனாலும் நாங்கள் ஆரம்பித்தோம்.இந்தியா உட்பட பல நாடுகள் இதனை இலங்கை நீதிபதிகளே முன்னெடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டு வெளியக விசாரணையை நிராகரிக்கின்றன.
ஆனால் நாங்கள் கண்காணிப்பாளர்களை ஏற்க தயார் என தெரிவித்தோம்." எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.