" உள்ளுராட்சிசபைத் தேர்தல் நெருங்கும்நிலையில் தலைவர் பிரபாகரனின் பெயரைகூட உச்சரிக்கும் நிலைக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வந்திருப்பதை வாழ்த்துகின்றோம்." என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு,
" தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்கள் மட்டுமல்ல வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்படவில்லை. மன்னாரில் மட்டும் ஒரு வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். யாழ்.மாவட்டத்திலும் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எல்லா சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம்.
தலைவர் பிரபாகரனின் பெயரைக்கூட உச்சரிக்கும் அளவுக்கு வந்திருப்பதை வாழ்த்துகின்றோம். தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக அவரின் ஊரை பற்றியும் பேசுகின்றீர்கள்.
ஆனால் வாயால்தான் பேசுகின்றீர்கள், ஆறு மாதகாலம் ஆகியும் வடக்கு, கிழக்கில் எதுவும் நடக்கவில்லை. இதனை தமிழ் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். பட்டலந்த அறிக்கை பற்றி பேசுகின்றீர்கள், தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் கதைக்கப்படுவதில்லை." - என்றார்.