பிரபாகரன் உயிரிழக்கும்போது நான்தான் பதில் பாதுகாப்பு அமைச்சர். எனவே, போரின் இறுதி கட்டத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும் எனவும், படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் படை தளபதிகளுக்கு பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ள தடை பெரும் அநீதியாகும் எனவும் அவர் கூறினார்.
" எமது தாய்நாடு, ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்காக பாதுகாப்பு தரப்பினர் போராடியுள்ளனர். அவர்கள் மனிதர்களை கொல்லவில்லை. மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை.
போரின் இறுதி கட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துவரும்போது இராணுவத்தினரே அவர்களை பாதுகாத்தனர். மாறாக இனவாத நோக்கில் அழிக்கவில்லை." எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
நான் ஐந்து தடவைகள் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளேன். போரின் கடைசி இரு வாரங்களில்கூட நானே பதில் பாதுகாப்பு அமைச்சர். பிரபாகரன் மரணிக்கும்வேளையும் அப்பதவியில் நான் இருந்தேன். எனவே, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும்.
பிரிட்டனின் நடவடிக்கை அநீதியாகும். தடை விதிக்கப்பட்டுள்ள எமது நாட்டின் முன்னாள் படை தளபதிகள் தளரக்கூடாது, அவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பின்னால் நாடு உள்ளது." - எனவும் மைத்திரி மேலும் குறிப்பிட்டார்.