" தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுப்பதற்குரிய நடவடிக்கையில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில நாடுகள் பிரிட்டனை பின்பற்றி தடைகளை விதிக்கக்கூடும்." என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" விசாரணைகள் எதுவுமின்றி, போலி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகள் மூவருக்கு பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடேல் பாலசிங்கம், அன்டன் பாலசிங்கம் ஆகியோரை ஊட்டி வளர்த்து தமது நாட்டில் வைத்திருந்து இலங்கையை பிளவுபடுத்துவதற்கு சூழ்ச்சி செய்த பிரிட்டன், தமது இலக்கு நிறைவேறாத நிலையில் தற்போது படையினரை குறிவைத்து தடைகளை விதித்துள்ளது.
இராணுவ தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு தடை விதிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவரவில்லை. ஆனால் சரத் பொன்சேகாவுக்கு கீழ் இருந்த சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தகறை படிந்த வரலாறுகொண்ட பிரிட்டன்தான் இலங்கைக்கு தற்போது மனித உரிமைகள் பற்றி பாடம் கற்பிக்க வருகின்றது.
புலிகள் அமைப்புக்கு மீள புத்துயிர் கொடுப்பதற்குரிய நடவடிக்கையையே பிரிட்டன் முன்னெடுத்துள்ளது. பிரிட்டனை பின்பற்றி எதிர்காலத்தில் மேலும் சில நாடுகள் நடவடிக்கை எடுக்கலாம்.
போர் பீதியின்றி வடக்கு, கிழக்கு மக்கள் இன்று சந்தேசமாக வாழ்கின்றனர். இந்திய தொலைக்காட்சி நிகழ்வுகளுக்குகூட அங்குள்ளவர்கள் செல்கின்றனர்.
பிரிட்டனின் தடை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பிரிட்டனின் நடவடிக்கையை கண்டிக்கவில்லை. அதற்குரிய முதுகெலும்பு ஆட்சியாளர்களுக்கு இல்லை." - என்றார்.