" யாழ். திஸ்ஸ விகாரைக்குரிய எஞ்சிய காணியையும் போலியான உறுதிப்பத்திரங்களை காண்பித்து கொள்ளையடிப்பதற்கு முயற்சி இடம்பெறுகின்றது." என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
" திஸ்ஸ விகாரைக்குரிய பெருமளவான காணிகள் போர் காலத்தில் பல தரப்பினராலும் போலியான உறுதி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி உறுதி பத்திரங்களை வைத்துக்கொண்டு எஞ்சியுள்ள காணியையும் கொள்ளையடிப்பதற்கு முற்படுகின்றனர்.
இதற்கிடையில் வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் பெறுமதியான இடங்களை இந்து, பௌத்தம் என அடையாளப்படுத்துவதை நிறுத்துமாறு தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த பகுதிகளில் இந்து தொல்லியல் அடையாளங்கள் எவராலும் சவாலுக்குட்படுத்தப்படுவதில்லை. பௌத்த தொல்லியல் இடங்கள்தான், இந்துக்குரியவை என சவாலுக்குட்படுத்தப்படுகின்றன. பௌத்த தொல்லியல் இடங்களில் விக்கிரகங்களை வைத்து குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்லியல் அடையாளங்கள் இனங்காணப்பட்டாலும் அவை பௌத்தத்துக்குரியவை என கூறமுடியாத நிலை இதனால் ஏற்படும்." எனவும் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.