உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பெயர்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்: ஜனாதிபதி உறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய குழுவின் பெயர் விபரம் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
“ஊழல், மோசடிகள் தொடர்பில் மட்டும் அல்ல குற்றங்கள் சம்பந்தமாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முறையாக இடம்பெற்றுவருகின்றன.
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மீண்டும் நினைவுகூரப்படும். எனவே, ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு பொறுப்பு கூறவேண்டிய குழவை பகிரங்கப்படுத்துவதற்கு சிஐடியினர் முயற்சித்துவருகின்றனர். அதனை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.” எனவும் ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மூவர் சிறையில் இருக்கின்றனர். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபரும் சிறையில் இருக்கின்றார். இந்நாட்டை குற்ற நாடாக மாற்றுவதற்கே கடந்த காலங்களில் முற்பட்டுள்ளனர். எனவே, அடுத்து வரும் நாட்களில் சிறப்பான செய்திகள் காத்திருக்கின்றன.
ஊழல்,மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் மற்றும் அவர்களை பாதுகாத்த தரப்பினர்தான் தற்போது ஊடகங்கள் முன்னிலையில் கதறிவருகின்றனர்.” எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.