“மிருசுவிலில் அப்பாவி குடும்பமொன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டது. அதேபோல 11 மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படியான செயல்களில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்க முற்படும் அரசியல் வாதிகளே தேசத்துரோகிகளாவார்கள்."
இவ்வாறு இறுதிப்போரின்போது இராணுவ தளபதியாக பதவிவகித்த பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
' படையினருக்குரிய பிரச்சினையை வைத்து அரசியல்வாதிகள் தமக்கு புள்ளிகளை பெறுவதற்கே முற்படுகின்றனர். மாறாக படையினருக்குரிய புகழை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இன்றளவிலும் பிரச்சினைகள் உள்ளன.
படையினரின் அரசியல் காவலன் என தன்னை காண்பித்துக்கொண்ட மஹிந்த ராஜபக்சதான் என்னை , போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தார்." எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
' நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தை எவரேனும் மீறியிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இராணுவத்துக்குரிய ஒழுக்கம் பாதுகாக்கப்படும். சுனித் ரத்நாயக்க என்ற நபர், ஒருவர்மீது சூடு நடத்தினார். அந்த சம்பவத்தை மறைப்பதற்காக ஒட்டு மொத்த குடும்பத்தையும் வெட்டிக்கொலை செய்தார். இந்நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச அவரை விடுதலை செய்து, படையினரை விடுவிக்கின்றோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, இராணுவ தளபதியாக இருந்தாலும்கூட சட்டத்தை மீறி இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." எனவும் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு எதிராக 11 மாணவர்கள் கடத்தல் குற்றச்சாட்டு உள்ளது. 11 மாணவர்களில் ஒருவர் இங்கிலாந்து பல்கலைக்கழகத்துக்கு செல்ல இருந்தவர். எனவே, கரன்னாகொடவுக்காக இன்று குரல் கொடுக்கும் அரசியல் வாதிகள், தமது குடும்பத்தில் எவருக்கேனும் இப்படி நடந்திருந்தால் நீதியை எதிர்பார்க்கமாட்டார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இப்படி நான் வெளிப்படையாக பேசுவதால், படையினரை காட்டிக்கொடுப்பதாக சிலர் முகநூலில் விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையை கதைப்பதற்கு நான் அஞ்சப்போவதில்லை.
சீருடை அணிந்து தவறிழைத்திருந்தால், அப்படியானவர்களை பாதுகாக்க முற்படும் அரசியல்வாதிகள்தான் தேசத்துரோகிகள், ஒழுக்கமுள்ள இராணுவ கட்டமைப்பை விரும்பாதவர்கள்.” - எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.