அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு பிற நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு பரஸ்பர வரி ஏப்ரல் 2-ம் திகதி முதல் வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அமெரிக்க நேரப்படி இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு அறிவிப்பு வெளியாகும்.
இதையடுத்து, இது தொடர்பாக உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தின. எனினும், வரி கட்டாயம் அமுலாகும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தகப் போர் தமது நாட்டு பொருளாதாரத்துக்கும் தாக்கம் செலுத்தும் என ஆஸ்திரேலியா கருதுகின்றது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பிரகாரம் அமெரிக்க இறக்குமதிகளுக்கு ஆஸ்திரேலியா சலுகை வழங்கிவருகின்றது.
எனவே, ட்ரம்பின் வர்த்தகப்போர் தமக்கும் தாக்கம் செலுத்தினால் உலக வர்த்தக நிலையத்தில் அதனை சவாலுக்குட்படுத்துவதற்கு லேபர் அரசு தயாராகிவருகின்றது.
மாட்டிறைச்சி உட்பட ஏனைய இறைச்சிகளே ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன
. அதேபோல மருந்து மற்றும் விவசாய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உருக்கு மற்றும் அலுமியனம்மீதான வரியாலும் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று காலத்தில் ஆஸ்திரேலிய ஏற்றுமதிகளுக்கு சீனா கூடுதல் வரியை விதித்ததையடுத்து அதற்கு எதிராக உலக வர்த்தக நிலையத்தில் ஆஸ்திரேலியா முறையிட்டது. இந்நிலையிலேயே ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராகவும் உலக வர்த்தக நிலையத்தை நாட தயாராகிவருகின்றது.