அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் ஆபத்திலிருந்து மீள்வதற்காக விசேட நிபுணர்கள் அடங்கி குழுவொன்றை விரைவலில் வாஷிங்டனுக்கு அனுப்பி, ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
' உலகின் அனைத்து நாடுகளுக்குமான புதிய இறக்குமதி வரியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
முழு நாட்டையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தையும் கவலையடையச் செய்துள்ள இந்த விடயம் குறித்து பல மாதங்களுக்கு முன்னரே நாம் எச்சரித்திருந்தோம்.
எனினும், அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாம் பேசும்போது, ஒலிவாங்கியை துண்டித்து, எம்மை பரிகாசித்து தற்காலிக மகிழ்ச்சியை அரசாங்கம் அடைந்தது." எனவும் எதிர்க்கட்சி தலைவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் மீது 44 சதவீத வரியை விதித்ததன் மூலம் நாட்டின் ஏற்றுமதி பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. குறிப்பாக ஆடைத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, ரணசிங்க பிரேமதாசவால் நிறுவப்பட்ட 200 ஆடைத் தொழிற்சாலைகளும், எமது நாட்டின் ஏற்றுமதித் துறையை நம்பி வாழும் இலட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளும் ஆபத்தில் காணப்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் முன்வைத்த போது, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட தூதுக் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது. அரசாங்கத்தால் எப்போது இவ்வாறான ஒரு தூதுக் குழு அனுப்பட்டது?" எனவும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
நமது நாட்டின் ஏற்றுமதியைப் பாதுகாக்க விசேட திட்டமொன்று தேவையாகும். எனவே, வர்த்தகம் தொடர்பிலான விசேட பிரதிநிதி மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான விசேட நிபுணர்கள் குழுவை நியமித்தது அவர்களை உடனடியாக வாஷிங்டனுக்கு அனுப்புங்கள்." சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.