இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதை கனடா உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
' 2022 ஆம் ஆண்டு கனடாவில் ( ஒன்டாரியோ மாகாண அரசு) தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் எனக் கூறி பாடத்திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்விடயத்தை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிராந்திய அரசாங்கத்துக்கு இவ்வாறான அதிகாரம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதை கனடா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
நெவில் ஹேவகே என்ற தேசப்பற்றாளரே இதற்கான பணியை முன்னெடுத்தார். எமது நாட்டின் கௌரவம் அவருக்கு உரித்தாக வேண்டும். அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்." - என்றார்.