முள்ளிவாய்க்கால் கொடூரத்தை ஒருபோதும் மறக்கமாட்டோம்: நீதிக்காக போராடுவோம் என்கிறார் பிரிட்டன் எம்.பி. உமா குமரன்
முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒருபோதும் மறக்கமாட்டோம்: நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தினார்.
தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
" பல குடும்பங்களை போல எனது பெற்றோர்கள் பாதுகாப்பை தேடி இலங்கையிலிருந்து தப்பிவெளியேறினார்கள்,வலிமை தியாகம் மற்றும் உறுதியுடன்,புதிய நாட்டில் வாழ்க்கையை உருவாக்கிய அவர்களின் கதை,பிரிட்டனின் கதையின் ஒரு பகுதியாகும்.
இன்று அவர்களின் மகளாக உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர்களின் நம்பிக்கையையும் உங்களின் நம்பிக்கையும் நான் நாடாளுமன்றத்தில் சுமக்கின்றேன்." எனவும் உமா குமரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் அரசாங்கத்தில் எங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் பாடுபட்டிருக்கின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக,இலங்கையில் போர்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மாக்னி;ட்ஸ்கி பாணி தடைகளை விதிக்கவேண்டும் என நான் அழைப்பு விடுத்தேன். அன்றிலிருந்து இந்த விடயம் தொடர்பில் செயற்படுவதை நான் நிறுத்தவில்லை.
15 துயரமான வருடங்களிற்கு பின்னர் தொழில்கட்சி இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்." எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு காரணமான இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டிஸ் அரசாங்கம் தடைகளை விதித்தது. இது நீதிக்கான நீண்டகாலமாக காத்திருந்த பல குடும்பங்களிற்கு மிக முக்கியமானதொரு தருணம்.
ஆனால் நீதி என்பது ஒரு முறை மாத்திரம் நடக்கும் நிகழ்வல்ல,நாம் தொடர்ந்து செயற்படவேண்டும், ஐநாவின் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு ஏற்ப இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என நான் அழைப்பு விடுத்துள்ளேன்." என ஈழ பின்னணி கொண்ட பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.