" கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, புலிகளுக்கு எதிராக போராட தீர்மானித்தமையே புலிகள் அமைப்பின் முடிவுக்குரிய ஆரம்பமாகும்." - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன், புலிகள் அமைப்பிடமிருந்து இந்நாட்டை பாதுகாப்பதற்காக வழங்கிய தீர்க்கமான பங்களிப்புக்காக தேசிய நாயகனாக கருதப்பட வேண்டியவரே பிள்ளையான். ஒரு தேசப்பற்றாளருக்காகவே நான் சட்டத்தரணியாக முன்னிலையாகியுள்ளேன் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் கலந்துரையாடினேன். 4 பொலிஸார் எமது உரையை முழுமையாக செவிமடுத்துக்கொண்டிருந்தனர். சட்டத்தரணியொருவர் தனது சேவையாளருடன் கலந்துரையாடும் விடயம் இரகசியத்துக்குட்பட்டது. எனினும், இங்கு நான்கு பொலிஸார் இருந்தனர்.
பிள்ளையான் கதறி அழுதவாறே என்னிடம் இப்படி கேள்வி எழுப்பினார்.
'புலிகள் அமைப்பில் இருந்து விலகி, இராணுவத்துடன் இணைந்து - உயிரைக்கூட பணயம் வைத்து புலிகளைத் தோற்கடிப்பதற்கு போராடினேன்.
அன்று புலிகள் பக்கம் இருந்தவர்களில் சிலர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
சிலர் வியாபாரிகளாகியுள்ளனர். மேலும் சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாகியுள்ளனர். இவர்களிடம் கேள்வி கேட்கப்படுவதில்லை.
என்னை 5 வருடங்கள் தடுத்து வைத்திருந்தனர். இறுதியில் வழக்கு தொடுப்பதற்கு போதுமான சாட்சி இல்லை என்பதால் வழக்கு மீளப்பெறப்பட்டது. தற்போது மீண்டும் தடுப்பில் வைத்துள்ளனர்.
புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்காக, நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடியதாலா என்னை இப்படி நடத்துகின்றனர்." என பிள்ளையான் மிகவும் உணர்வுப்பூர்வமாக என்னிடம் கேள்வி எழுப்பினார்.
சமூகவலைத்தளங்களில் எழுதும் சிறு பிள்ளைகளுக்கு பிள்ளையான் என்பவர் யாரென்பது தெரியாமல் இருக்கலாம். புலிகளிடமிருந்து இந்நாட்டை பாதுகாப்பதற்காக அவர் வழங்கிய தீர்க்கமான பங்களிப்புக்காக தேசிய நாயகனாக கருத வேண்டிய நபர் அவர்.
கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து விலகி, புலிகளுக்கு எதிராக போராட தீர்மானித்தமையே புலிகள் அமைப்பின் முடிவின் ஆரம்பமாகும்.
பிள்ளையான் என்பவர் புலிகள் அமைப்பில் பலவந்தமாக இணைக்கப்பட்ட சிறுவர் போராளியாவார். புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தனர் என்பதற்கான ஒரு சாட்சியே பிள்ளையான்.
கருணா அம்மானும் புலிகள் அமைப்பில் சிறந்து விளங்கியவர்.
வடக்கு சமரின்போது புலிகளை, கிழக்கு புலிகளே பாதுகாத்து வந்துள்ளனர். 6 ஆயிரம் பயங்கரவாதிகளுடன்தான் கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினர்.
நாட்டைவிட்டு தப்பிச்செல்லாது, புலிகள் அமைப்பை ஒழித்துக்கட்டுவதற்கு இராணுவத்துடன் இணைந்து போராடும் முடிவை இவர்கள் இருவரும் எடுத்தனர். புலிகளிடமிருந்து எம்மால் இலகுவில் கிழக்கையும் மீடகக்கூடியதாக இருந்தது.
பிள்ளையான் என்பவர், புலிகள் அமைப்பை கைவிட்டவர் என்பது மட்டுமல்ல புலிகளுக்கு எதிராகவும், எமது நாட்டுக்காகவும் போராடிய தேசப்பற்றாளர்." - என்றார்.