' பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது போர் இல்லை. எனவே, பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது.
விடுவிக்ககூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
'மீண்டும் போர் மூளும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வேலை செய்யவில்லை. போர் ஏற்படுவதை தடுப்பதற்காகவே நாம் செயற்படுவோம். அதுதான் அரசாங்கத்துக்குரிய பொறுப்பாகும்.
யாழ்ப்பாணத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு நாம் கொண்டுவருவோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளது. உங்களுடைய பிள்ளைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தால், இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தால், அந்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை தேடிபார்க்க வேண்டும். அது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வலி எமக்கு நன்கு தெரியும்.
அதேவேளை, இந்நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது. இனவாதத்தை தடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்." - என்றார்.