" தேசிய ஒற்றுமைக்குரிய நேசக்கரத்தை தமிழ் மக்கள் நீட்டியுள்ளனர். அவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது. எனவே, அம்மக்களின் அனைத்துவித அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" அத்திவாரம் இல்லாத நாடொன்றே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, முன்னோக்கி செல்வதற்கு வலுவான அத்திவாரம் அவசியம். அதற்கான முழு முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதேபோல தேசிய ஒற்றுமை எமக்கு மிக முக்கியம். அவ்வொற்றுமை இல்லாமல் முன்னோக்கி செல்ல முடியாது. கடந்த தேர்தலின்போது தேசிய ஒற்றுமைக்கான பயணத்தில் எம்மைவிட வேகமாக ஒரு அடியை தமிழ் மக்கள் முன்வைத்தனர்." எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் நாம் குறைந்தளவிலேயே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மொழியிலான முழுமையான தொடர்பாடலும் இருக்கவில்லை. அப்படி இருந்தும் வடக்கில் இருந்த பாரம்பரிய கட்சிகள் மற்றும் தலைவர்களை நிராகரித்து எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். இது எதனை வெளிப்படுத்துகின்றது? தேசிய ஒற்றுமைக்கான தேவையையே அது வெளிப்படுத்துகின்றது.
எனவே, அம்மக்கள் முன்நோக்கி வைத்த காலை நாம் பின்நோக்கு எடுக்கும் வகையில் செயற்படக்கூடாது. அவர்களின் உரிமை, கலாசார உரிமை, மொழி உரிமை, பாரம்பரிய காணி உரிமை, இலங்கை பிரஜைகளாக வாழ்வதற்குள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும். நாட்டை மீட்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைதான் இது. இதனை செய்யாமல் நாட்டை மீட்டெடுப்பது பற்றி சிந்திக்க முடியாது.
பிரித்தாளும் அரசியலை தோற்கடித்து ஒற்றுமைக்கான அரசியலை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர்." - எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.