பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அச்சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றிய குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது - என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று முன்தினம் இரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
' எமது நீண்டகால எதிர்பார்ப்புகளும், ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துகளும் சமாந்தரமுடையவையாக உள்ள என நான், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினேன்.
1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவந்தபோது அதற்கு எதிராக கறுப்புக்கொடி பறக்கவிட்டு, சிறைக்கு சென்றவர்கள் எமது உறுப்பினர்கள்.
அதேபோல 1988 மற்றும் 89 காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாமே கமையாக பாதிக்கப்பட்டோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தினோம். எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும் என கூறினேன்.
சட்டமொன்றை இரத்து செய்யும்போது, சட்டத்தில் வெற்றிடம் இருக்கக்கூடாது. அவ்வாறான வெற்றிடத்துக்கு இடமளிக்காது, சட்டத்தை ஈடுசெய்யக்கூடிய வகையில் புதிய சட்டம் அவசியம். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும், புதிய சட்டத்தை கொண்டுவரவும் குழுவொன்றை நியமித்துள்ளோம்." - என்றார்.