" பிராந்திய அமைதிதான் இலங்கைக்கு மிக முக்கியம். எனவே, எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் இலங்கையின் வான், கடல் மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது இந்தியா, பாகிஸ்தானுக்கிடையிலான மோதல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இந்திய, பாகிஸ்தான் நிலைவரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அரசாங்கத்தக்கும் தகவல் வழங்கப்பட்டுவருகின்றது.
இந்து சமுத்திர வலயத்தில் இடம்பெறும் பூகோல மோதலில் இலங்கை தலையிடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எமது இறையாண்மையை பாதுகாத்துக்கொண்டு, அணிசேராக் கொள்கையின் பிரகாரம் செயற்படுவோம்.
அதேபோல தீவிரவாதத்தை நாம் ஆதரிக் கமாட்டோம். தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்பு வழங்கப்படும்.
எமக்கு பிராந்திய பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதி என்பனதான் எமக்கு முக்கியம். அதற்காக நாம் செயற்படுவோம்.
அதேபோல இந்திய, பாகிஸ்தான் பிரச்சினை தெற்காசிய அரசியல் மற்றும் இந்து சமுத்திர பொருளாதாரத்தக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது பற்றி ஆராய்கின்றோம்.
இந்தியாவும், பாகிஸ்தானும் எமக்கு உதவிகளை வழங்கியுள்ளன. இரு நாடுகளுடனும் இராஜதந்திர உறவு பேணப்படும். சிலப் பிரச்சினை அவர்களால் தீர்க்கப்பட வேண்டியவை. எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் எமது வான், கடல், நிலப்பரப்பை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம். இது தொடர்பில் எமது நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது." - என்றார்.