தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அம்மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முற்படுவார்கள் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்குரிய முயற்சி இடம்பெறுகின்றது.
குடியேற்றத் திட்டத்துக்காகவே காணிகளை அபகறிக்க முற்படுகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாமடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களை எதிரிகளாகவே பார்க்கும் முப்படைகளின் தமிழர் விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இந்த அரசாங்கத்தக்கு முதுகெலும்பிள்ளை எனவும், காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
'கடந்த மார்ச் 28 ஆம் திகதி அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களில் மொத்தமாக 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிக்குரிய - குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் இருக்கின்ற தனியார், தங்குளுக்குரிய காணி உறுதிகளை உறுதிப்படுத்தாத பட்சத்தில் தாங்கள் அந்த குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் உள்ள காணிகளை அரசாங்க காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் சனத்தொகையை எடுத்துக்கொண்டால் வடக்கு, கிழக்கு தாயக நிலப்பரப்பில் இருக்கின்ற சனத்தொகைக்கு சரிபாதியாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழ்கின்றனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் தீவை விட்டு வெளியேறினர். அவர்களுடைய அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டே, சில நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கோரும் நிலைமை இருந்தது.
இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்பவர்கள் திரும்ப முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தமது காணியை உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. இதனை இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல், அமுல்படுத்திக்கொண்டுள்ளனர். அப்படிபட்ட சூழ்நிலையில் காணி உரிமையாளர்கள் 3 மாதத்துக்குள் இங்கு வந்து காணியை உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது.
அதேபோல இன்று தமிழர் தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கும்கூட பல தடவைகள் இடம்பெயறவேண்டிய நிலை உள்ளது. எனவே, 3 மாத கால இடைவெளி என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. இந்த காணி பிரச்சினையென்பது இனப்பிரச்சினையின் அடிப்படை காரணி எ
ன்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இயற்கை நீதிக்கு முரணாக மக்களின் காணிகளை சட்டவிரோதமாக பறித்து, அந்த காணிகளை குடியேற்றங்களுக்கு பயன்படுத்தபோகின்றனர் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். இதுதான் உண்மை.
இது விளங்காமல் அரசாங்கம் அவசரப்பட்டு - தவறாக செய்யும் விடயம் அல்ல. வடக்க, கிழக்கில் உள்ள முப்படைகள் அங்கு வாழும் தமிழ் மக்களை எதிரிகள் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றது.
இந்த அரசாங்கம் மட்டும் அல்ல இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அந்த மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முயற்சிக்கலாம் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள நிலங்களை அபகரிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள் இனவாதிகள், தாங்கள்தான் புனிதமானவர்கள் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இந்த அநியாயத்தை செய்யப்போகின்றனர். இது வெறுமனே தமிழர்களை குறிவைக்கும் செயல் மட்டும் அல்ல, தமிழ் பேசும் மக்களை குறிவைக்கும் செயலாக மாறும். வடக்கில் நடப்பது நாளை கிழக்குக்கும் வியாபிக்கும்.
இராணுவத்தின் தமிழ் விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கத்தக்கு முதுகெலும்பு இல்லை. மனோ நிலைமையை மாற்றுவதற்கு இயலாது. இவர்களும் இராணுவத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு துணைபோகின்றனர் என்றுதான் பார்க்கலாம்.
வடக்கு, கிழக்கில் பாரிய பின்னடைவை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கம் சந்தித்துள்ளது. இதனை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தமிழ்த் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வராமல் இது விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்பட முடியாது. அது நல்லிணக்கத்தக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்." - என்றார்.