கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: நாமல் போர்க்கொடி!
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் எனவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய தூதுவரை அழைத்து, இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்கு கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடனாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப்பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
'இலங்கை இராணுவம், விடுதலைப் புலி பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் இனப்படுகொலை நடக்கவில்லை. அப்படி நடந்தது என நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது.
தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசாங்கத்தால் அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகிறது. இது நீண்ட காலமாக தமிழ் புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள சில பிரிவுகளால் முன்னெக்கப்படுகிறது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன." - எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.