முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சமீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை நிரூபித்து, அவரை குற்றமற்றவர் ஆக்குவதற்கான தர்ம யுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது.
இந்த தர்ம யுத்தத்தில் நாமல் ராஜபக்சவே தளபதியாக செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களின் பணத்தை ராஜபக்சக்கள் உகண்டாவில் பதுக்கி வைத்துள்ளனர்.
அவர்களுக்கு டுபாயில் ஹோட்டல்கள் உள்ளன, தங்க குதிரை உள்ளது என்றெல்லாம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, உண்மையை தெளிவுபடுத்துமாறு, மொட்டு கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் சிஐடியில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக மொட்டு கட்சியின் சட்டத்தரணிகளும் வருகை தந்திருந்தனர்.
சிஐடியில் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அரசியல் செயற்பட்டாளர்
' ராஜபக்சவின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் வைராக்கியம் விதைக்கப்பட்டது. போர் முடிந்த நாளில் இருந்துதான் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் மக்களின் தங்கங்களை ராஜபக்சக்கள் கன்டேனர்களில் கொண்டுசென்றனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் அரசாங்கம் பொறுப்பேற்ற தங்கம், அண்மையில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ராஜபக்சக்கள் எடுத்தனர் என்ற பொய் 15 ஆண்டுகளாக நிலவியது. இதனால் எமது கட்சிக்கு ஏற்பட்ட இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல." - எனவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜபக்சக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால்தான் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்தக்கு வாக்குகள் குறைந்தன. அத்துடன், மஹிந்த ராஜபக்ச குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கான சமரை ஆரம்பிக்குமாறும் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
அதற்கமையவே தர்ம யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. நாம் வீடுகளை கொளுத்த மாட்டோம்." எனவும் மொட்டு கட்சியின் செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.